×

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை ஒன்றிய, பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன: அமைச்சர் அன்பரசன் பேச்சு

குன்றத்தூர்: திருமுடிவாக்கத்தில் புதிய கட்டிட திறப்பு விழாவில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை பிற மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் பின்பற்றி வருகின்றன என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுடிவாக்கம், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், கோவூர், சிறுகளத்தூர் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் மொத்தம் ரூ.3.27 கோடி மதிப்பில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகிய புதிய கட்டிடங்கள் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா திருமுடிவாக்கம் அடுத்த வழுதலம்பேடு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு, ரூ.3.27 கோடி மதிப்பில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகிய புதிய கட்டிடங்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர் அன்பரசன் பேசுகையில், ‘பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை 1.13 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம், மாதம் தோறும் 1013 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை தற்போது பிற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் பின்பற்றி வருகின்றன. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இந்த வாக்குறுதியை சொல்லித்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தின் மூலம் மாதம் தோறும் 45 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால், தினமும் வேலைக்கு, வியாபாரத்திற்கு செல்லும் பெண்கள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்றால் அது மிகையாகாது. அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம், தற்போது குழந்தைகள் வயிறார உண்டு மகிழ்கின்றனர்.

இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போதுதான் மத்திய அரசு இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுவும் 140 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 10 கோடி மக்களுக்கு மட்டுமே இதனை வழங்கி, அதையும் பெரிதாக விளம்பரம் செய்து வருகின்றனர். ஆனால், திமுக அரசு கடந்த 2006 முதல் 2011 வரை காலகட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச எரிவாயு சிலிண்டருடன், அடுப்பும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று தான் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இலவசமாக கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது. அதையே காப்பி அடித்து தற்போது மத்திய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வருகிறது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள நல திட்டங்கள் ஒவ்வொன்றையும் பிற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு பின்பற்றி வருகின்றனர்’ என்றார். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணி, உமா சத்தியமூர்த்தி, சுமதி வைத்தீஸ்வரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழக அரசு கொண்டு வந்துள்ள பல திட்டங்களை ஒன்றிய, பிற மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன: அமைச்சர் அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union ,Tamil Nadu government ,Minister Anbarasan ,Minister ,Anbarasan ,Thirumudivakam ,Union government ,Kunradur ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...